மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டு மசோதாவில் ஓ.பி.சி. பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனைத் தொடர்நது மகளிர் மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் மக்களவையில் மசோதா மீதான விவாதம் மீது உரையாற்றிய ராகுல்காந்தி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரிப்பதாக தெரிவித்தார். இருந்தபோதிலும், மசோதா முழுமையானதாக இல்லை எனவும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவையில்லை எனவும் குறிப்பிட்டார். அவர் பேசும்போது இடையில் குறுக்கிட்ட பாஜகவினர், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் பேசிய அமைச்சர் அமித்ஷா, 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை சில கட்சிகள் அரசியலாக பார்ப்பதாகவும், காங்கிரஸ் கட்சி மகளிருக்கு உரிய அதிகாரம் வழங்கியதில்லை எனவும் குற்றம் சாட்டினார். பல ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாகவும், முக்கிய விவகாரங்களில் பெண்கள் பங்களிப்பதை இம்மசோதா உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.







