பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மனு

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 11 குற்றவாளிகளும் கோத்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ்…

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 11 குற்றவாளிகளும் கோத்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரையும் கொன்ற வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் கோத்ரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

 

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் கோத்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு விருந்து வைத்து இனிப்பு வழங்கியது போன்ற பல புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதையடுத்து நாடு முழுக்க இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு பதிவுகள் பரவி வருகின்றன.

இதனிடையே, 11 பேரும் கோத்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர்கள் அபர்ணா பட் மற்றும் கபில் சிபல் ஆகியோர் இந்த மனுவை முறையிட்டனர்.

 

பில்கிஸ் பானு தொடர்பான வழக்கின் குற்றவாளிகளை விடுவித்ததை எதிர்த்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். அதன்படி இந்த வழக்கை நாளையே விசாரிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர். இதனை கேட்ட நீதிபதி அமர்வு அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்த பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.