குஜராத்தில் கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானுவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, 3 வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்திருக்கும் குஜராத் அரசின் செயலுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2002ம் ஆண்டு நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப் படுகொலைகளின் போது கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானுவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து 3 வயது குழந்தை உள்பட 14 பேரை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்திருக்கும் செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன்.
இந்த படுகொலையில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டு 10 கோடி மதிப்பிலான அவர்களது உடைமைகள் சூறையாடப்பட்டு ஒரு இனப்படுகொலையே நடத்தி முடிக்கப்பட்டது. இது இந்திய நாட்டின் வரலாற்றில் ஒரு கறுப்புப்பக்கமாகும்.
கர்ப்பிணி பெண் பில்கிஸ், அவரது 3 வயது குழந்தை மற்றும் குடும்பத்தினர் உள்பட 14 பேரை கொலை செய்த 11 பேருக்கு குஜராத் அரசு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தன்று முன்விடுதலை அளித்துள்ளது மிகவும் கண்டத்திற்குரியது என்று தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.







