மேகதாது அணைக்கு இன்றே பூமி பூஜை நடத்த வேண்டும்; கர்நாடகா காங்கிரஸ்

மேகதாது அணைக்கு இன்றே பூமி பூஜை நடத்த வேண்டும் என கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் நீர்ப்பாசன துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே…

மேகதாது அணைக்கு இன்றே பூமி பூஜை நடத்த வேண்டும் என கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் நீர்ப்பாசன துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி  சென்றபோது பிரதமர் மோடியிடமும் இதை வலியுறுத்தினார். தமிழக அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தும் இந்தக் கோரிக்கையை வைத்தார்.

இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமார், 100 ஆண்டுகள் ஆனாலும் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருக்கும். அந்த எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் இன்றே மேகதாது அணைக்கு கர்நாடக மாநில அரசு பூமி பூஜை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், இந்த அதிகாரத்தை பயன்படுத்தி இன்றே பூமி பூஜையை தொடங்க வேண்டும் என்று கூறியுள்ள டி.கே.சிவகுமார், அரசியல் வேறுபாடுகளை மறந்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து ஓரணியில் திரள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.