மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில்கொண்டு நேரடி வகுப்பு நடத்த ஏதுவாக, விரைவில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.சி இளங்கோவன் தலைமையில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு மனு அளிக்கப்பட்டது.
அதன்படி, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் எந்த பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடத்தகூடாது என ஆணை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து, மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் கொண்டு நேரடி வகுப்பு நடத்த ஏதுவாக, விரைவில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தற்காலிக அங்கீகாரம் முடிந்த பள்ளிகளுக்கு, கொரோனா சூழலை கருத்தில் கொண்டு உடனடியாக மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
தனியார் பள்ளிகளில் முகாம் அமைத்து, அந்தந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய பாடத் திட்டம், தேர்வுமுறை சீர்த்திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக கல்வியாளர் குழுக்களை அமைத்து, அதில் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







