தமிழ்தாய் பெற்றெடுத்த பெருங்கவிஞனாக வாழ்ந்த மகாகவி பாரதியாரின் 101நினைவு நாள்
பாட்டுக்கு ராஜாவாக பைந்தமிழ் தேரில் பவனி வந்து, மக்களின் செவிகளிலும், மனங்களிலும் செந்தமிழ் தேன் பாய்ச்சியவர் மகாகவி பாரதி. மறைந்து 101 ஆண்டுகள் ஆனாலும், சாகா வரம் பெற்ற கவிதை வரிகள் வழியே, இன்றும் தமிழ் முழக்கம் செய்து கொண்டிருக்கிறார் பாரதி. பூமியில் எங்கும் பிறக்கவில்லை என தமிழ் மொழியின் பெருமையும், தமிழர்களின் பெருமையையும் ஓங்கி உரைத்த முதல் கவிஞர் பாரதி.
சுப்பிரமணியன் என்னும் இயற்பெயரைக் கொண்ட பாரதி 1882-ல் எட்டயபுரத்தில் பிறந்து 11 வயதில் கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். பின்னர், எட்டயாபுரத்து அரசவைக்கவிஞர்களும், அரசும், சான்றோர்களும் வழங்கிய பட்ட பெயர் தான் பாரதி. 1897-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, பின்னர் 1898 முதல் 1902 வரை காசியில் இருந்தார்.
ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த நிலையில், 1904-ம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. அப்போது மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிகொண்டிருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியின் போது, தன் எழுச்சி மிகு வரிகளால் மக்களிடையே, விடுதலை வேட்கையை தட்டி எழுப்பினார்.
பெண்கள் உரிமை, சாதி ஒழிப்பு என சமூகத்தின் அனைத்து தளங்களிலும் இயங்கிய பெருங்கவிஞராக திகழ்ந்தார். அடிமைத்தன ஒழிப்பு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர் மகாகவி பாரதி. தமிழ்தாய் பெற்றெடுத்த பெருங்கவிஞனாக வாழ்ந்த பாரதி கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டிருந்தார்.
அவர் மறைந்து 101 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவரின் எழுத்துகள், சமூகத்திற்கு பயனுள்ளதாக உள்ளது. பாரதியாரை நினைவுக் கூறும் விதமாக பாரதியாரின் நினைவு நாளை மகாகவி நாளாக அனுசரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







