முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்ரீரங்கம் கோயிலில் நடன கலைஞருக்கு அனுமதி மறுப்பு: நிர்வாகம் விளக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்குள் பரத நாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு வந்த பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேனை, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் இவர். தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் நூற்றுக்கணக்கான பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர் ஜாகிர் உசேன். இந்த சம்பவம் தொடர்பாக அவர் தனது முகநூலில் வருத்தம் தெரிவித்திருந்தார்.

“நான் தாய்வீடாக கருதும், தினமும் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். காரணம் என் பெயர். இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. காலம், திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை” என்று பதிவிட்டிருந்தார்.

டி.எம்.கிருஷ்ணா, ஜாகிர் ஹுசைன்

இச்சம்பவம் தொடர்பான கண்டனத்தை இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ”இச்சம்பவம் என்னை ஆழமாக பாதித்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். துலுக்க நாச்சியாருக்கு சிறப்பிடம் தருவதன் மூலமாக ஸ்ரீரங்கம் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதை நாம் மறந்துவிட வேண்டாம்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து கோயிலின் இணை ஆணையர் மாரிமுத்து விளக்கமளித்துள் ளார். கோயில் நிர்வாகம் யாருக்கும் அனுமதி மறுப்பது இல்லை எனக் கூறிய அவர், வெளிநாடுகளிலிருந்து பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள் என்று தெரிவித்தார். சுற்றுலா பயணிகள் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கல் என்றும் கோயில் நிர்வாகம் சார்பாக ரங்கராஜன் நரசிம்மன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கோலி விவகாரத்தை தேர்வு குழு கையாண்ட விதம் தவறானது; வெங்சர்க்கார்

Saravana Kumar

கொரோனாவை துல்லியமாக கண்டறியும் ஜெர்மன் செயலி

Gayathri Venkatesan

அழுகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!

Jayapriya