மக்களே உஷார்… சச்சின் பெயரில் இணையத்தில் போலி மருந்துகள் விற்பனை!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பெயரில் இணையத்தில் போலி இணைய தளத்தின் மூலம் விளம்பரங்கள் செய்யப்பட்டு மருந்துகள் விற்கப்படுவதாக புகார் அளித்துள்ளார். பிரபலங்களின் படங்களை வணிக நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துவது ஒரு…

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பெயரில் இணையத்தில் போலி இணைய தளத்தின் மூலம் விளம்பரங்கள் செய்யப்பட்டு மருந்துகள் விற்கப்படுவதாக புகார் அளித்துள்ளார்.

பிரபலங்களின் படங்களை வணிக நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துவது ஒரு புதிய நிகழ்வு அல்ல. நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் இது போன்ற பிரச்சினைகளை அவ்வப்போது சந்தித்து வருகின்றனர். அதே போல் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பெயர் மற்றும் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக ஏற்கனவே பல முறை புகார் அளித்துள்ளார்.

அந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர், இணையத்தில் தனது பெயர், புகைப்படம் மற்றும் குரலை போலியான விளம்பரங்களில் பயன்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்தப்பட்டு வருவதாகவும் மும்பை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக டெண்டுல்கரின் உதவியாளர் ஒருவர் மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.

அந்த புகாரில் ”மே 5 அன்று பேஸ்புக்கில் பெல்லி பர்னர் எண்ணெயின் விளம்பரத்தில் டெண்டுல்கரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இன்ஸ்டாகிராமிலும் அந்த நிறுவனத்தின் விளம்பரங்கள் காணப்படுகின்றன. மேலும் ஒரு இணையதளத்தில் டெண்டுல்கரின் பெயரைப் பயன்படுத்தி கொழுப்பைக் கரைக்கும் ஸ்ப்ரே விற்பனை செய்யப்படுகிறது. அந்த ஸ்ப்ரேயுடன் டெண்டுல்கர் கையெழுத்திட்ட டி-சர்ட் இலவசமாகப் வழங்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

டெண்டுல்கர் அளித்த புகாரில் தனது பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்த மேற்கண்ட எந்த நிறுவனத்திற்கும் தான் அனுமதி வழங்கவில்லை எனவும், இது தனது பெயரை இழிவுபடுத்தும் எனவும், இந்த போலி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும்  கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது மும்பை சைபர் கிரைம் போலீசார் IPC 426, 465, மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.