“சிங்கப்பெண்களே” கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்- முதலமைச்சர் ட்வீட்

சிங்கப்பெண்களே கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று கலை, அறிவியல் கல்லூரிகள்,…

சிங்கப்பெண்களே கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், பாலிடெக்னிக் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

புதுமைப்பெண் திட்டத்தின் தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ள பெண்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சிங்கப்பெண்களே…!, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரிலான புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை கல்விக்காக எவ்வகையில் பயன்படுத்தலாம் என்று வழங்கப்பட்டுள்ள கையேட்டைப் பயன்படுத்தி பெற்றோரின் வழிகாட்டுதலுடன் உயர்கல்வியில் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.