பொதுமக்களிடம் காவல் துறையினர் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை காவல் வளாகத்தில் உள்ள பல்பொருள் அங்காடியின் புதிய விரிவுபடுத்தப்பட்ட பிரிவை காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பங்கேற்றார்.
பின்னர் நிகழ்ச்சியில்பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, இந்த பல்பொருள் அங்காடி
56 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு காவல் துறையினர் தங்களுக்கு தேவையான அனைத்து வீட்டு உபயோக பொருட்களையும் வாங்கி கொள்ளலாம். ராணுவத்தில் இருந்த இந்த வசதி தற்போது காவல்துறைக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் உள்ள காவலர்களுக்கு ஓய்வு மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளார். இது மிக முக்கிய அறிவிப்பு மன அழுத்தம், சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆண்டுக்கு 250 முதல் 300 காவலர்கள் உயிரிழப்பதாகவும், அதில் ஆண்டுக்கு 40 காவலர்கள் உயிரிழப்பு செய்துகொள்கிறார்கள் என வருத்தத்துடன் டிஜிபி தெரிவித்தார். மேலும், காவலர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாணவர்கள் இடையே நடைபெறும் மோதல் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், நேற்று பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களிடையே மோதலில் மாணவர்கள் மீது தான் தவறு உள்ளதாகவும், மாணவர்களுக்கு இதுவே கடைசி எச்சரிக்கை எனவும், மீண்டும் இது போல் நடந்தால், வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்தார்.
மேலும், பொதுமக்களை அடிக்கும் அதிகாரம் காவலர்களுக்கு இல்லை எனவும், ஆனால் காவலர்களும் சில இடங்களில் பொதுமக்களால் தாக்கப்படுவதாகவும்,
காவலர்களுக்கு ஒழுங்கு கற்று கொடுக்கவும், மன அழுத்தத்தை போக்கவும்,
பொதுமக்களுடன் கனிவாக நடக்கவும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது எனவும்
கூறினார்.








