எஞ்னியரிங் படித்தவர்கள், ஓட்டல் வாசலில் உணவு வாங்கி, அதை டெலிவரி செய்து பிழைக்கும் சூழலையை மாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் தொழிற்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழும் மக்களில் 70% பேர் விவசாயிகள் என்றும், காலிப்ளவர், கேரட், சௌசௌ போன்ற காய்கறிகள் கிருஷ்ணகிரி பகுதியில் அதிகம் விளைவதாகவும், 75,000 சதுர கி.மீ, பரப்பில் அமைந்துள்ள மலர்களை தயாரிக்கும் பசுமை தோட்டத்தின் மூலம் ரூ.200 கோடி ரூபாய் வருவாய் வருவதாகவும் குறிப்பிட்டு பேசிய அவர், விவசாயத்தையே நம்பி உள்ள விவசாயிகளின் நிலத்தை, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அரசு கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினார்.
மேலும், ஏற்கனவே தொழில்கள் நிறைந்த மாவட்டமாக உள்ள கிருஷ்ணகிரியில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, ரூ.16,000 கோடியில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டதாகவும், சில்லறை வணிகர்களை பாதிக்கக்கூடிய தொழில்களை முந்தைய அதிமுக அரசு ஊக்குவிக்காமல் இருந்தது போல், தற்போதைய அரசும் அத்தகைய சூழலை ஊக்குவிக்கக்கூடாது என்றும் கே.பி.முனுசாமி வலியுறுத்தினார்.
அண்மைச் செய்தி: யாருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும்?
தமிழ்நாட்டு தொழிற்சாலைகளில், 75% வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க ஏதுவாக சட்டம் கொண்டுவரப்படும் என்று திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளதாக பேசிய கே.பி.முனுசாமி, 2-வது பட்ஜெட்டையும் தாக்கல் செய்திருக்கும் திமுக அரசு இந்த வாக்குறுதியை எப்போது செயல்படுத்தும்? என்றும் கேள்வி எழுப்பினார். இறுதியாக எஞ்னியரிங் படித்தவர்கள், ஓட்டல் வாசலில் உணவு வாங்கி, அதை டெலிவரி செய்து பிழைக்கும் சூழலையை மாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








