மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி

பள்ளி, கல்லூரிக்குச் செல்லும்போது மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார். கல்வி, சமூக நிதி, கூட்டாட்சி தத்துவம் குறித்த திமுக மாணவர் அணியின் தேசிய…

பள்ளி, கல்லூரிக்குச் செல்லும்போது மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.

கல்வி, சமூக நிதி, கூட்டாட்சி தத்துவம் குறித்த திமுக மாணவர் அணியின் தேசிய மாநாடு சென்னை கடற்கரை சாலையில் இருக்கும் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

நான் 17 வருடம் வாத்தியாராகப் பணியாற்றியவன். உங்களைப் பார்க்கும் பொழுது எனக்கு பழைய வகுப்புகள் எடுத்த நினைவுகள் வருகிறது. மாநிலங்களைக் காப்பதே ஆளுநரின் வேலையாக இருக்க வேண்டுமே தவிர மத்தியை காப்பது அல்ல. ஸ்டாலின் இளைஞர் அணி தலைவராக இருக்கும்போது பல பாசறைகளை நடத்துவார். அதை தற்பொழுது இருக்கும் மாணவர் அணியும் பின்பற்ற வேண்டும். ஒரு தனியார் கல்லூரிக்கு பட்டமளிப்பு விழாவுக்குச் சென்று இருந்தேன், அதில் 70 மாணவர்களில் 55 பெண்கள் பட்டம் பெற்றனர். இதைப் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று பலர் கூறினார்கள். ஆனால் பலரும் வட மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருகின்றனர். ஒரு சிலர் பானி பூரி விற்றுக்கொண்டு உள்ளனர் என்று நகைச்சுவையாக தெரிவித்தார். கலைஞரைப் பொறுத்த வரை எந்த துறையில் நுழைந்தாலும் சிறப்பாக ஜொலிப்பவர்.

எங்கள் காலத்தில் அவர்பட்ட கஷ்டம் தான் தற்பொழுது பல பெண்கள் படிக்கிறார்கள். அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளது என்பதைப்போல ஸ்டாலின் மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீட்டை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி உள்ளார். உதயநிதியை குழந்தையில் இருந்து எனக்குத் தெரியும். ஸ்டாலினுக்கு இருக்கும் அதே உணர்வில் இருப்பவர் உதயநிதி.

பள்ளி மற்றும் கல்லூரிக்கு நீங்கள் செல்லும் போது மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இங்கே கற்ற கருத்தை உங்கள் நண்பர்களிடமும் கூற வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.