பிபிசி ட்வீட் சர்ச்சை – காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அனில் கே ஆண்டனி

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்திற்கு எதிரான ட்வீட் சர்ச்சையைத் தொடர்ந்து, ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் கே ஆண்டனி அனைத்து காங்கிரஸ் கட்சி பதவிகளில் இருந்தும் இன்று…

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்திற்கு எதிரான ட்வீட் சர்ச்சையைத் தொடர்ந்து, ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் கே ஆண்டனி அனைத்து காங்கிரஸ் கட்சி பதவிகளில் இருந்தும் இன்று ராஜினாமா செய்தார்.

2002 குஜராத் கலவரம் தொடர்பான சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படமான “ India:The Modi Question”என்ற ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இருந்தும் மத்திய அரசின்எதிர்ப்பை மீறி தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை திரையிட்டதோடு, கேரள மாநிலத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் பிபிசி ஆவணப்படத்தை திரையிடத் தயாராகி வந்தது. இந்நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே.ஆண்டனியின் மகனான அனில் கே.ஆண்டனி, தனது ட்விட்டரில் பிபிசி தயாரித்திருந்த மோடி குறித்த ஆவணப்படத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதில், அவர் பதிவிட்ட கருத்தில் பிஜேபியுடன் பெரிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நான் நினைப்பது என்னவென்றால், பிரிட்டிஷ் அரசு சார்பில் நடத்தப்படும் பிபிசி சேனல் இந்தியர்களைப் பற்றி நீண்டகாலமாகவே தவறான எண்ணம் கொண்டுள்ளது, அதன் வெளிப்பாடாகவே இதை பார்க்கிறேன். மேலும் அந்த சேனலில், ஈராக் போரின் பின்னணியில் மூளையாக இருந்த, பிரிட்டன் முன்னாள் உள்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ராவின் கருத்தை, இந்திய நிறுவனங்கள் மீது பதிப்பது ஆபத்தான முன்னுரிமையாக அமைந்துவிடும், இது நம்முடைய இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும் என தெரிவித்திருந்தார்.

இந்த பதிவு நாடு முழுவதும் வைரலான போதிலும் பிபிசிக்கு எதிரான அவரது ட்வீட் பரவலான விமர்சனத்தையும் பெற்றது. இதனால் அதிருப்தியடைந்த அனில் கே ஆண்டனி இன்று புதன்கிழமை கேரள காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகியதாக தனது ட்வீட் மூலம் ராஜினாமாவை அறிவித்தார், அதில் ஆவணப்படத்திற்கு எதிரான தனது ட்வீட்டை திரும்பப் பெறுவதற்கு சகிப்புத்தன்மையற்ற அழைப்புகள் வருவதாகவும், அதே பிரச்சினையில் பேஸ்புக்கில் உள்ள வெறுப்பு, துஷ்பிரயோகங்களின் வெளிப்பாடு தன்னை இந்த முடிவை எடுக்கத் தூண்டியது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அதனுடன் ராஜினாமா கடித்தின் திருத்தப்பட்ட வடிவத்தையும் இணைந்திருந்த அவர், நேற்றைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, காங்கிரஸில் எனது அனைத்துப் பொறுப்புகளையும் விட்டுவிடுவது பொருத்தமானது என்று தான் நம்புவதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.