”முகாம்களில் உள்ளவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை உடனடியாக வழங்க வேண்டும்” என மணிப்பூரிலிருந்து திரும்பிய திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பாக மணிப்பூர் சென்று திரும்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
” மணிப்பூரில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய , மாநில அரசுகள் பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றனர்.
வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என மைதேயி, குக்கி என இரு சமூக மக்களும் மத்திய, மாநில அரசுகள் மீதான வருத்தத்தை வெளிப்படுத்தினர். மாநில அரசு போதிய பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைளை மேற்கொள்ளவில்லை என மைதேயி சமூக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முகாம்களில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை, நல்ல உணவு இல்லை
என மக்கள் புகார் தெரிவித்தனர். குக்கி சமூக மக்கள் மைதேயி, சமூக மக்களோடு சேர்ந்து இனிமேல் தங்களால் வாழ இயலாது, ஏனெனில் மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்று தங்குவதற்கு பாதுகாப்பு இல்லை என்ற வருத்ததை பதிவு செய்தனர்.
இதேபோல் மைதேயி சமூக மக்கள் துச்சத்பூர் மாவட்டத்திலிருந்து வெளியேறிவிட்டோம். மீண்டும் அங்கு சென்று வாழ்வதற்கான வாய்ப்பு மிகவும் அரிது என்று தெரிவித்தனர்
மியான்மரில் இருந்து பலர் புலம்பெயர்ந்து மணிப்பூரில் வாழ்ந்து வருகின்றனர் அவர்களால்தான் இங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது, எனவே என்.ஆர்.சி-யை அமல்படுத்த வேண்டும் எனவும் மியான்மரில் இருந்து வந்தவர்களை திரும்ப அனுப்ப வேண்டும் என மெய்த்தி சமூக பெண்கள் கோரிக்கை வைத்தனர்.
மணிப்பூர் ஆளுநரை சந்தித்தோம், மீண்டும் மணிப்பூரில் சுமூகமான வாழ்க்கை அமைய வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும். அமைதி திரும்பும் என நம்புகிறோம். மணிப்பூர் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் “ என திருமாவளவன் தெரிவித்தார்.







