மணிப்பூர் வன்முறையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பல சமூக மக்கள் குற்றம்சாட்டியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பாக மணிப்பூர் சென்று திரும்பிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
”மணிப்பூர் மக்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை காணமுடிகிறது. மணிப்பூரில் எங்கும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதனால் அமைதியாக இருப்பதுபோல் தோற்றமளிக்கிறதே தவிர, இன்னமும் மணிப்பூரில் ஆங்காங்கே வன்முறை நடைபெற்று கொண்டிருக்கிறது.
மணிப்பூரில் பாலியல் கொடுமைக்கு ஆளான இரு பெண்களை சந்தித்தோம். அவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். குறிப்பாக தங்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினர் வன்முறை கும்பலிடம் ஒப்படைத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மணிப்பூர் வன்முறையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பல சமூக மக்கள் குற்றம்சாட்டினர். மணிப்பூரில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக மருத்துவ மாணவர்களின் ஓர் ஆண்டு படிப்பு வீணாவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தங்களின் வசிப்பிடங்களுக்கு மீண்டும் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எதிர்காலம் குறித்த பயம் மணிப்பூர் மக்களிடம் உள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நேரடியாக பார்த்த விவரங்களை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்துவோம்” என கனிமொழி தெரிவித்தார்.







