மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை மேற்கொண்டார்.
கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இருப்பினும், அணை கட்டுவதில் கர்நாடகா அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில், டெல்லி சென்ற கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதில், மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மகதாயி ஆறு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீட்டில் உள்ள சிக்கல் குறித்தும், மத்திய அமைச்சருடன், கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை மேற்கொண்டார்.
https://twitter.com/BSBommai/status/1430543355033702403
மேகதாது விவகாரம், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்னை குறித்து சட்ட வல்லுநர்களுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







