பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 20 முதல் 26 ஆம் தேதி வரை 6 டன் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 8,00,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தொர்மாகோல், தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காதிதத் தட்டுகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காதி சுருள், தாமரை இலை உள்பட 12 வகையான பொருட்களை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரை அழகுப்படுத்தவும், பசுமைப் பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல், தீவிர தூய்மைப் பணியின் கீழ் நீண்ட நாள் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதிக்கின்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் வணிக நிறுவனங்கள், விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை ரூ.8,00,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள், பொதுமக்கள் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








