ஆம்பூர் பிரியாணி திருவிழாவிற்கு தடை

ஆம்பூரில் நடைபெற இருந்த பிரியாணி திருவிழாவிற்கு எதிராக சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில்  உள்ள பிரியாணி மிகவும் பிரபலமானது. ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு…

ஆம்பூரில் நடைபெற இருந்த பிரியாணி திருவிழாவிற்கு எதிராக சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில்  உள்ள பிரியாணி மிகவும் பிரபலமானது. ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக மூன்று நாட்கள் நடத்தப்படும் பிரியாணி திருவிழா முதல் முறையாக நடத்துவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாவட்ட ஆட்சியர்  அனுமதி வழங்கியிருந்தார். ஆனால் ஆட்டுக்கறி, கோழிக்கறி பிரியாணிக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.

இந்நிலையில் மாட்டிறைச்சி பிரியாணியும் இடம் பெற வேண்டும் என ஆம்பூர் கோட்டாட்சியரிடம் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் ஓம் பிரகாஷ் மனு அளித்துள்ளார். மேலும் பிரியாணி விற்பனையாளர்களிடம் முறையாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்காமல் ஒருமனதாக மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா முடிவெடுத்துள்ளது பல்வேறு பிரியாணி விற்பனையாளர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆம்பூரில் நடைபெறவிருக்கும் பிரியாணி திருவிழா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதன் காரணமாகவும், இரண்டு நாட்கள் அதிக அளவில் மழைப்பொழிவு வரும் என்ற காரணத்தினாலும் பிரியாணி திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இந்து முன்னணி கட்சியினர் பிரியாணி திருவிழா நடைபெறுவது போல சைவ உணவு திருவிழா நடத்தப்பட வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.