இலங்கை பிரதமரானார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. இதன்…

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதன் காரணமாக, இரு தினங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இதையடுத்து, தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, விரைவில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறி இருந்தார். மக்களின் நம்பிக்கையை பெற்றவராக அவர் இருப்பார் எனவும் கோத்தபய தெரிவித்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்கேவுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறி இருந்தார்.

இதனால், ரணில் விக்ரமசிங்கேதான் அடுத்த பிரதமராக வருவார் என தகவல் வெளியானது. எனினும் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த சூழலில், இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, அதிபருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதில், 4 நிபந்தனைகளின் அடிப்படையில் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக கூறி இருந்தார்.

இந்நிலையில், இலங்கையின் 23 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, ஆறாவது முறையாக இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான புதிய அமைச்சரவை விரைவில் அமையும் என்றும், அந்த அமைச்சரவை அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.