பால்டிமோர் பாலம் நிகழ்வு: இந்தியர்களை விமர்சித்து வீடியோ – அமெரிக்க நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அமெரிக்காவில் உள்ள கப்பல் ஒன்று பாலத்தில் மோதி உடைந்த சம்பவம் குறித்து, இந்தியர்கள் மீது வெறுப்பை காட்டும் ஒரு கார்டூன் வீடியோ ஒன்றை அமெரிக்க நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்காவின் பால்டிமோர்…

அமெரிக்காவில் உள்ள கப்பல் ஒன்று பாலத்தில் மோதி உடைந்த சம்பவம் குறித்து, இந்தியர்கள் மீது வெறுப்பை காட்டும் ஒரு கார்டூன் வீடியோ ஒன்றை அமெரிக்க நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ பேசுபொருளாகியுள்ளது.

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ‘பிரான்சிஸ் ஸ்காட் கீ’ என்ற பாலத்தை கடக்க முயன்ற சரக்கு கப்பல் எதிர்பாராத விதமாக பாலத்தின் மீது மோதி அதன் பெரும்பகுதி உடைந்து ஆற்றில் விழுந்தது. கடந்த 26-ம் தேதி இந்த நிகழ்வு அரங்கேறியது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. கப்பலில் 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக தகவல் வெளியானது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு குழுக்கள் உடனடியாக அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது

அந்த கப்பலின் பணியாளர்களை அமெரிக்க அதிபர் பிடென் பாராட்டினார். கப்பலில் பெரும்பாலோர் இந்தியர்கள் அவர்களின் உடனடி அபாய அழைப்பு தான் பல உயிர்களை காப்பாற்றியது. பாலத்தின் போக்குவரத்தை மூடுவதற்கு அதிகாரிகளைத் தூண்டியது அவர்கள் தான், இது உயிர்களைக் காப்பாற்றும் செயல் என்று அவர் பாராட்டினார்.

இந்நிலையில் இந்தியர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்காவை சேர்ந்த “வெப்காமிக்” என்ற நிறுவனம் இந்த சம்பவத்தை சித்தரிக்கும் கார்ட்டூனைப் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், கப்பலில் உள்ள பணியாளர்கள், இடுப்பில் மட்டுமே ஆடை அணிந்த, ஒழுங்கற்ற மனிதர்களைக் காட்டுகிறது. மேலும் அந்த கப்பலின் கேபினில் இறுதியாக இதுதான் நடந்திருக்கும் என்று கூறி, இந்திய மொழி வழக்கத்தை கொண்ட சிலர் உரையாடிக்கொள்வதை போல அந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மீது வெறுப்பை காட்டும் ஒரு கார்டூனாக அது அமைந்துள்ளது. இந்தக் சமூக ஊடக கணக்கு, இந்தியர்களை இனவெறியுடன் சித்தரிப்பதற்காக மட்டுமல்ல, கப்பல் ஊழியர்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காகவும் விமர்சிக்கப்படுகிறது. மேலும் இந்த கார்ட்டூனைப் பகிர்ந்த இந்திய பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால், இந்த சம்பவத்தின் போது கப்பலை உள்ளூர் கப்பல் விமானி இயக்கியிருக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

“கப்பல் பாலத்தில் மோதிய நேரத்தில், அதற்கு உள்ளூர் விமானி இருந்திருப்பார். எப்படியிருந்தாலும், கப்பல் அதிகாரிகள், பிற அதிகாரிகளை எச்சரித்துள்ளனர். அதனால் தான் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தன. அந்த நகர மேயர் கூட நன்றி தெரிவித்துள்ளார். உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் எச்சரிக்கையை எழுப்பியதற்காக இந்திய குழுவினரை அவர் “ஹீரோக்கள்” என்று அழைத்துள்ளார்” என அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும் அந்த கார்ட்டூனை பகிர்ந்த நிறுவனத்திற்கு கடுமையாக விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.