32.2 C
Chennai
June 26, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

சமூக நல்லிணக்கம் போற்றும் பக்ரீத் பண்டிகை!


தமிமுன் அன்சாரி

கட்டுரையாளர்

உலகமெங்கும் 200 கோடிக்கும் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக ‘ ஈதுல் அல்ஹா ‘ திகழ்கிறது. தியாகத் திருநாள் / ஹஜ் பெருநாள்/ பக்ரீத் பண்டிகை எனவும் இது பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

இதன் வரலாற்று பின்னணியானது மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், கருத்தியல் சகோதரத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்தக்கூடியது என்பது ஒரு நற்செய்தியாகும். முஸ்லிம்கள், கிருத்துவர்கள், யூதர்கள் ஆகிய உலகின் மூன்று பெரும் சமூகங்களின் போற்றுதலுக்குரியவராக திகழ்பவர் நபி இப்ராகிம் (அலை) அவர்கள். அவர்களின் வாழ்விலிருந்தே இப்பெருநாளின் சிறப்பு தொடங்குகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள் தொடங்கி ; இறுதி தூதர் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் வரை; இவ்வுலகிற்கு வருகை தந்த நபிகள் எனும் இறைத்தூதர்களை திருக் குர்ஆன் கொண்டாடுகிறது. மேலும் எல்லோரையும் சமமாக போற்றுகிறது என்பதையும் புரிந்துக்கொண்டால், இக்கட்டுரையின் கருத்துகளை புரிந்துக் கொள்வது எளிதாக இருக்கும்.

நபி இப்ராகிம் ( அலை) அவர்கள்தான் மெக்காவில் உள்ள காஃபா எனும் புனித பேராலயத்தை நிர்மாணித்தார்கள் என்பது வரலாறாகும். அவர்கள் ஒரிறை கொள்கையை உறுதியாக பின்பற்றிய போராளியாகவும் வாழ்ந்தார்கள்.

அவர்கள் குழந்தை பாக்கியமற்றிருந்த நிலையில், அவர்களது வலிமையான பிரார்த்தனை காரணமாக முதிய வயதில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு இஸ்மாயில் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். சீராட்டி வளர்த்தார்கள். இருவரையும் திருக்குர்ஆன் நபிகள் என்ற அந்தஸ்தை வழங்கி சிறப்பிக்கிறது. கிருஸ்தவ பெருமக்கள் நபி இப்ராகிமை ஆப்ரஹம் என்றும், நபி இஸ்மாயிலை இஸ்மவேல் என்றும் போற்றுகிறார்கள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கதாகும்.

ஒரு நாள் நபி இப்ராகிம் (அலை) அவர்கள் இறைவனால் சோதிக்கப்படுகிறார்கள். தனது அருந்தவப்புதல்வரை இறைவனுக்காக பலியிட வேண்டும் என்ற ஒரு கனவை அவர்கள் காண்கிறார்கள். தவமாய் தவமிருந்து பெற்ற ஒற்றை புதல்வரை பலி கொடுப்பதா? என அவர்கள் தயங்கவில்லை. இது இறைக்கட்டளை என்பதை இனிய புதல்வரிடம் இதமாக எடுத்துரைக்கிறார்.

தந்தையின் கனவை இனிதே நிறைவேற்ற இன்முகத்துடன் சம்மதம் தருகிறார் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்கள். உருக்கமும், உணர்வும் கலந்த வரலாற்று நிகழ்வு இது. தந்தை இப்ராகிம் நபி அவர்கள், தன் தவப்புதல்வரை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுக்க முற்பட்டப்போது, அதை நிறுத்தக் கோரி இறைவனால் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. நரபலி தடுக்கப்பட்டு அதற்கு பகரமாக ஒரு ஆட்டை இறைவனின் திருப்பெயரால் பலியிடுமாறு உத்தரவு வந்தது.

அந்த இறைக்கட்டளையை ஏற்று அவ்வாறே நபி இப்ராகிம் (அலை) அவர்கள் செய்தார்கள். இது தான் ‘குர்பானி ‘ எனப்படுகிறது. இறைவனின் சோதனையில் பெற்ற மகனையே பலி கொடுக்க துணிந்த அவரது தியாகத்தைதான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தியாகத் திருநாளாக கொண்டாட பணித்தார்கள்.

இங்கே ஒன்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பிறந்தநாளையோ, தனக்கு ‘வஹி’ எனும் இறைச்செய்தி கிடைத்திட்ட நாளையோ கொண்டாட சொல்லவில்லை. தனக்கு முன்னால் இவ்வுலகிற்கு வருகை தந்து; ஒரிறை கொள்கையை பரப்புரை செய்த ; கிருத்தவர்களும், யூதர்களும் போற்றும் நபி இப்ராகிம் (அலை) அவர்களின் தியாகத்தைத்தான் கொண்டாட சொல்லியிருக்கிறார்கள்.

இது அவர்கள் முன்னெடுத்த சகோதரத்துவத்தை வெளிக்காட்டுகிறது. அதைத்தான் உலகெங்கும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். அதன் முக்கிய அம்சமாக நாடு, மொழி, இனம், நிறம் கடந்து மெக்காவுக்கு காஃபா பேராலயத்தை தரிசிக்க புனிதப்பயணிகளாக திரள்கிறார்கள். ஹஜ் பயணம் மேற்கொள்ளாதவர்களும், மேற்கொள்ள முடியாதவர்களும் உலகம் எங்கும் இப்பெருநாளை அவரவர் மண்ணில் பூரிப்புடன் கொண்டாடுகிறார்கள். பல்கிப் பெருகும் கால்நடைகளான ஆடு , மாடு, ஒட்டகங்களை பலியிட்டு அவற்றின் கறியை ஏழைகளுக்கும், தேவையுடையோருக்கும் வழங்கி மகிழ்கிறார்கள்.

இதில் கூட ஒழுங்குகள் கூறப்பட்டுள்ளது. ஒரு பிராணியின் கண் முன்னே மற்றொரு பிராணியை அறுக்கக்கூடாது, பால் தரும் அல்லது குட்டியை சுமக்கும் பிராணிகளை அறுக்கக்கூடாது, நன்கு கூர்தீட்டப்பட்ட கத்தியால் – சித்ரவதை செய்யாமல்- குரல் வளையை மூன்று முறைக்கு மிகாமல் அறுக்க வேண்டும் என விலங்கின உரிமைகள் இங்கு விதிகளாக்கப்பட்டிருக்கிறது.

‘பக்ரீத்’ பண்டிகை என இந்தியாவில் மட்டும் இவ்வாறு ஏன் குறிப்பிடப்படுகிறது? என்ற கேள்வி பலருக்குண்டு. பக்ர் எனும் உருது சொல்லுக்கு ஆடு என்று அர்த்தமாகும்.

பக்ரி என்றால் ஆட்டுக்குட்டி என்று அர்த்தம். இதன் பின்னணியிலிருந்தே இப்பண்டிகை ‘பக்ரீத்’ என்று முன்மொழியப்படுகிறது. இறைவனுக்காக தியாகம் செய்தலை நினைவில் நிறுத்தும் இப்பெருநாள் ஆனது, சமூக நல்லணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் போற்றுகிறது. கால்நடை வளர்ப்போர், நெசவாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் என சகலருக்கும் வருவாயை ஈட்டித்தரும் செல்வ செழிப்புமிக்க பண்டிகையாகவும் இருப்பதால் சகல தரப்பினரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.

இத்திருநாளில் நமது நாடு எல்லா வளங்களையும் பெறவும், மக்கள் யாவரும் ஒற்றுமையாக வாழவும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம்!

இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்…!!!

  • தமிமுன் அன்சாரி, முன்னாள் எம்எல்ஏ. பொதுச் செயலாளர் – மனிதநேய ஜனநாயக கட்சி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading