கரூரில் மாநாடு நடத்த பாஜக 1ம் தேதி அனுமதி பெற்று மாநகராட்சி சொந்தமான
மைதானத்தில் நேற்று மேடை அமைக்கும் பணிகளை துவக்கியதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வருகின்ற ஜூலை 1ம் தேதி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கலந்து
கொள்ளும் கரூர் மாற்றத்திற்கான மாநாடு மாநகராட்சிக்கு சொந்தமான திருவள்ளுவர்
மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கான அனுமதியை மாநகராட்சியை அணுகி கேட்ட போது, அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நீதிமன்றம் சென்ற பாஜகவினர், மாநாடு நடத்த நீதிமன்றம் அனுமதி பெற்று வந்தனர்.
1ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கு மேடை அமைத்தல், தடுப்புகள் அமைப்பதற்கான பணிகளை நேற்று மாலையில் மாநகராட்சி அதிகாரிகளின் அனுமதியுடன் திருவள்ளுவர் மைதானத்திற்குள் சென்று அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய துவங்கியுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில துணை தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான K.P.இராமலிங்கம் உள்ளிட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் அதனை மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வந்தன.
தகவலறிந்து அங்கு திரண்ட திமுகவினர், 1ம் தேதிக்கு அனுமதி பெற்று இன்றே பணிகளை துவங்கியதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நுழைவு வாயிலில் திரண்டு எதிர்ப்பை தெரிவித்து காத்திருந்தனர். இரு தரப்பினரும் மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு கரூர் மாநகர காவல் துறையினரும், அதிவிரைவு படை போலீசாரும் அதிகளவில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.
மாநகராட்சி அதிகாரிகளையும் வரவழைத்த போலீசார் பாஜகவினரிடம் சென்று 1ம் தேதி தான் அனுமதி வாங்கி இருக்கிறீர்கள் பணிகளை தற்போது நிறுத்தி விட்டு நாளை வந்து துவங்குகள் என பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையில் பாஜகவினர் உடன்படாமல் கலைந்து செல்ல மறுத்து காத்திருந்தனர்.
இதற்கிடையில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்துவதாக கூறி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தின் நுழைவு வாயில் பகுதியில் திமுகவினர் கொடி கம்பங்களை நட்டு வைத்ததுடன், மைதானத்தின் உள் பகுதிகளிலும் கொடிக் கம்பங்கள் நட முயற்சித்தனர்.
அப்போது போலீசார் திமுகவினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதனை
தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக நாளை மாலை பணிகளை
ஆரம்பிக்கலாம் என உறுதி அளித்ததை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கிருந்து
கலைந்து சென்றனர். இதனால், அந்த மைதானத்தில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.







