பக்ரீத் பண்டிகை : சட்டவிரோத இறைச்சி வெட்டுதலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் – டெல்லி அரசு எச்சரிக்கை!

பக்ரீத் பண்டிகையையொட்டி சட்டவிரோத இறைச்சி வெட்டுதலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு எச்சரித்துள்ளது.

பக்ரீத் பண்டிகை வரும் மே 28ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி அன்றைய தினம் ஆடு உள்ளிட்ட விலங்குகளை பலியிடுதல் நிகழ்வு நடைபெறும். இந்த நிலையில் விலங்குகளை விற்பது, பலியிடுவது மற்றும் கழிவுகளை அகற்றுவது தொடர்பான வழிகாட்டுதல்களை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி தடை செய்யப்பட்ட விலங்குகளை வெளியிடுவது, சட்டவிரோதமாக விலங்குகள் சந்தை அமைப்பது அல்லது விலங்குகளை பலியிட்ட பின்பு கழிவுகளை அகற்றுவது தொடர்பான விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்ரீத் பண்டிகையின் போது பசுக்கள், கன்றுகள், ஒட்டகங்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட விலங்குகளை பலியிடுவது முற்றிலும் சட்டவிரோதமாகும். அவ்வாறு செய்பவர்கள் அல்லது அதற்கான முயற்சிகளை மேற்கொள்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறி பொது இடங்களில் விலங்குகளை பலியிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், தெருக்களில் சட்டவிரோதமாக சந்தைகள் அமைத்து விலங்குகளை வாங்கவோ, விற்கவோ செய்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் விலங்குகள் கழிவுகளை திறந்த வெளியிலோ அல்லது பொது இடங்களிலோ கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி அரசு எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.