மின்னஞ்சலில் அனுப்பிய ஜாமீன் உத்தரவை திறக்க முடியவில்லை – 3 வருடங்களாக சிறையில் கழித்த குஜராத் இளைஞர்..!

மின்னஞ்சலில் அனுப்பிய ஜாமீன் உத்தரவை திறக்க முடியாததால் 3 வருடங்களாக சிறையில் கழிக்கும் அவலம் குஜராத் இளைஞருக்கு நேர்ந்துள்ளது. மின்னஞ்சலில் அனுப்பிய ஜாமீன் உத்தரவின் இணைப்பை திறக்க முடியவில்லை என சிறை அதிகாரிகள் கூறியதால்,…

மின்னஞ்சலில் அனுப்பிய ஜாமீன் உத்தரவை திறக்க முடியாததால் 3 வருடங்களாக சிறையில் கழிக்கும் அவலம் குஜராத் இளைஞருக்கு நேர்ந்துள்ளது.

மின்னஞ்சலில் அனுப்பிய ஜாமீன் உத்தரவின் இணைப்பை திறக்க முடியவில்லை என சிறை அதிகாரிகள் கூறியதால், கூடுதலாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார் குஜராத்தை சார்ந்த ஆயுள் தண்டனை குற்றவாளி. எனவே ஆயுள் தண்டனை குற்றவாளிக்கு ரூ.1 லட்சம் வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை 14 நாட்களுக்குள் குற்றவாளியிடம் ஒப்படைக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வயதான சந்தன்ஜி தாக்கூர் என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை குற்றவாளியாக சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ​​செப்டம்பர் 29, 2020 அன்று இவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இருந்தபோதிலும் உயர் நீதிமன்றப் பதிவகம் அனுப்பிய ஜாமீன் உத்தரவைத் திறக்க முடியவில்லை எனக் கூறி சிறை அதிகாரிகள் கூறியதால், அவர் 2023 வரை தொடர்ந்து சிறையில் இருந்தார். இதன் பின்னர் இந்த ஆயுள் தண்டனை குற்றவாளி புதிய ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை  நீதிபதி ஏ.எஸ்.சுபேஹியா மற்றும் நீதிபதி எம்.ஆர்.மெங்டே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. ஜாமீன் கிடைத்தும் 3 வருடங்களாக சிறையில் இருக்கும்  குற்றவாளிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் நீதிமன்றம் தனது உத்தரவில், “இவ்வழக்கில், மனுதாரரை ஏற்கனவே ஜாமீனில் விடுவித்து இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து இந்த நீதிமன்றப் பதிவுத்துறை சிறை அதிகாரிகளுக்கு தெரிவித்தது. அதற்கு சிறைத்துறை தரப்பில் கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனவும் ஜாமீன் உத்தரவு அடங்கிய மின்னஞ்சலைப் திறக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட போதிலும், குற்றவாளியை ஜாமீனில் விடுவித்த உத்தரவு சரியான முறையில் செயல்படுத்தப்படுவதை சரிபார்க்க  எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என நீதிமன்றம் குற்றம்சாட்டியது.

இந்த நிலையில் மனுதாரரை விடுவித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பாக பதிவுத்துறை அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்தை தொடர்பு கொள்ள சிறை அதிகாரிகள் கவனம் செலுத்தாததால், சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜாமீன் கிடைத்த போதிலும் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் சிறையில் இருந்த கைதியின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என   நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.