இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றது. 66 ரன்கள் வித்தியாசத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான அணியை வீழ்த்தியது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் இணை 8 ஓவர் வரை இணைந்து 78 ரன்களைச் சேர்த்தது.
பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் வார்னர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் மார்ஷூடன் கைக்கோர்க்க, இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 96 ரன்களுடன் அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷை குல்தீப் யாதவ் அவுட்டாக்கினார். அடுத்து ஸ்மித் 74 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 35 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி 254 ரன்களைச் சேர்த்தது.
அடுத்து வந்த அலெக்ஸ் கேரி 11 ரன்களிலும், மேக்ஸ்வெல் 5 ரன்களிலும், கேமரூன் கிரீன் 9 ரன்களிலும் நிலைக்காமல் கிளம்பினர். மார்னஸ் லாபுசாக்னே மட்டும் மற்றொருபுறம் நிலைத்து ஆடி வந்தார். ஆனால், அவரை 49-ஆவது ஓவரில் பும்ரா அவுட்டாக்க 72 ரன்களில் நடையைக் கட்டினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 352 ரன்களைச் சேர்த்தது. பேட் கம்மின்ஸ் 19 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா, முஹம்மது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை அடுத்து இந்திய அணி தரப்பில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ரோஹித் ஷர்மாவும், வாஷிங்டன் சுந்தரும் களம் இறங்கினர். இதில் வாஷிங்டன் சுந்தர் 18 ரன்கள் சேர்த்த நிலையில், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மேக்ஸ்வெல் பந்தில் காட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து ரோஹித் ஷர்மாவுடன் கூட்டு சேர்ந்த விராட் கோலி பொறுப்பை உணர்ந்து விளையாடினார். அதிரடியாக விளையாடிய ரோஹித் 81 ரன்களை எட்டிய நிலையில் மேக்ஸ்வெல் பந்தில் அவரிடமே காட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 6 சிக்சர்களையும், 5 பவுண்டரிகளையும் பறக்க விட்டிருந்தார்.
இதனை அடுத்து அரை சதம் கடந்த விராட் கோலி 56 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இவரை அடுத்து கே.எல்.ராகுலும், ரவீந்திர ஜடேஜாவும் இரட்டை இலக்க எண்களுடன் நடையைகட்டினர்.
மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழக்க 50-ஆவது ஓவர் முடிவதற்குள் 10 விக்கேட்டுகளையும் இழந்தது இந்திய அணி. இறுதியாக இந்தியா 286 ரன்கள் எடுத்த நிலையில், 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. பந்துவீச்சை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் வென்றிருந்ததால் 2-1 என்ற வகையில் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.







