நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது சென்னை முதன்மை நீதிமன்றம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பேசி நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலர் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பெயரில், ஆகஸ்ட் 14-ஆம் தேதி கேரளாவில் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கை தனிப்படை போலீசார் கேரளா சென்று கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில், சென்னை புழல் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார். அதன்பிறகு மீரா மிதுன் ஜாமீன் கேட்டு தொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்பு இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் 35 நாட்களுக்கு மேல் தான் சிறையில் இருப்பதாகவும், கொரோனா காரணமாக தடுப்பூசிப் போட்டுக்கொண்டது சோர்வாக இருப்பதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தார். அந்த மனுவின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நீதிபதி செல்வக்குமார் நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
மேலும், குற்றப்பத்திரிக்கை நகல் வாங்க டிசம்பர் 17-ல் ஆஜர் ஆகும்படி சம்மன் மற்றும் தினமும் காலையில் 10.30 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுப்படி நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜரான மீரா மிதுன் மற்றும் அவரது நண்பற்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. பின்பு, வழக்கு விசாரணையை மார்ச் 21-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகை மீரா மிதுன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் குறிப்பிட்டு நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டுள்ளார். மேலும், நடிகை மீரா மிதுணை கைது செய்து ஏப்ரல் 4-ஆம் தேதி ஆஜர் படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டுள்ளார்.
- – சத்யா விஸ்வநாதன், மாணவ ஊடகவியலாளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








