திருப்பதியில் பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுக்க, 30 அடி உயர தங்கத் தேரில் வளம் வந்து மலையப்பசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வசந்த உற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் தங்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக 30 அடி தங்கத் தேரில் உலா வந்து, உற்சவர் மலையப்ப சுவாமி காட்சி அளித்தார்.
இதனை தொடர்ந்து, நடைபெற்ற தூப தீப நைவேத்திய சமர்ப்பணத்திற்கு பின், கோவில் மாடவிதிகளில் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே ஏழுமலையானின் தங்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 30 அடி உயர இந்தத் தங்கத் தேரைப் பெண் பக்தர்கள் மட்டுமே மாடவீதிகளில் வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது மாடவீதிகளில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரத்தி காண்பித்து மலையப்ப சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து திருமலை வசந்த மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








