பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக – கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதிக்குள் வரக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட…

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதிக்குள் வரக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அங்குள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாள்களில் மட்டும் ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் கோழிகள் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டிலும் அந்தப் பறவைக் காய்ச்சல் (ஹெச் 5 என் 1 ) பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கேரளத்தையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி அருகில் கால்நடை துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, கேரளாவில் இருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது. இதற்காக 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் கால்நடைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.