திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழாவின் முக்கியநாளான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
9-ம் திருநாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பகலில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கபெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். பின்னர் நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின் மீண்டும் காமராஜர் சாலை, உள்மாட வீதி வழியாக மேலக்கோயிலை சேர்ந்தனர்.
இரவு சன்னதி தெருவில் உள்ள பூச்சிக்காடு அருணாசலத்தேவர் வகையறா மண்டபத்தில் இருந்து சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி தேர் கடாட்சம் அருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு நடபெற்றது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை, அதை தொடர்ந்து வள்ளியம்பாள் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்ந்தது.
ஆவணி தேரோட்டம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முருக பெருமானின் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அரோகரா… அரோகரா… முழக்கத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்தது பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சேர்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் கோயிலில் நடபெற்று வரும் ஆவணி திருவிழா நமது நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் தொடர்ந்து நேரலையாக வழங்கப்பட்டு வருகிறது. இன்று தேரோட்டம் நிகழ்ச்சியும் காலையில் இருந்து நேரலை செய்யப்பட்டு வருகிறது. எனவே பக்தர்கள் நியூஸ் 7 தமிழ் யூடியூப் சேனலை பின்தொடர்ந்து ஆவணி திருவிழாவை கண்டு மகிழலாம்..
– இரா.நம்பிராஜன்