ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வைத்து தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.
ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யவும், முன்னோர்களை வழிபடக்கூடிய மிக சிறந்த நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். வருடா வருடம் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும்.
முன்னோர்களுக்கும், உயிரிழந்த தாய், தந்தையருக்கும் ஆடி அமாவாசை தினத்தில் இந்துக்கள் திதி கொடுத்து வழிபாடுவார்கள். கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொதுஇடங்களில் ஆடி அமாவாசையையொட்டி திதி தர்ப்பணம் கொடுக்க தமிழ்நாடு அரசு தடைவிதித்திருந்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் இல்லாததால் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
இராமேஸ்வரத்தில் ஆடி அம்மாவாசையையொட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். பின்னர் கோவிலுக்கு உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிவிட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி கடலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்களின் வருகையை ஒட்டி 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடற்கரையில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். எள், அன்னம், தண்ணீர் கொண்டு வேத மந்திரங்களுடன் முன்னோர்களை நினைத்து தர்ப்பனம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி நதிக்கரை, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் அதிகாலை முதலே தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நதிகளில் நீராடி தங்களின் முன்னோர்களுக்கு பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.







