ஆத்தூர் அருகே சேலம் – சென்னை செல்லும் புறவழிச்சாலையில் ஒன்றுக்கு பின்
ஒன்றாக 5 சொகுசு கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை செல்லும் நான்கு வழிச்சாலை 8
இடங்களில், இரு வழிச்சாலையாக உள்ளது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் இச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
வாகன விபத்துக்களை குறைக்க நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள், போக்குவரத்து ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் அமைப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஆத்தூர் புறவழி சாலையில், கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூருக்கு இடது புறமாக சென்ற சொகுசு கார் தென்னங்குடிபாளையம் என்னும் இடத்தில், எதிரே வாகனம் வந்ததால் காரின் ஓட்டுனர் காரை திடீரென பிரேக் போட்டுள்ளார்.
இதனால் பின் தொடர்ந்து வந்த நான்கு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கார்கள் மட்டும் சேதமான நிலையில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினார்கள். இதனால் சேலம் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
—ம.ஶ்ரீமரகதம்







