ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக காட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும். அதன்படி, புத்தக காட்சி தேதி வெளியானதும், பணத்தை சேமிப்பது, புத்தகங்களை அச்சிடுவது என விழாக் கோலத்திற்கான முன் ஏற்பாடுகள் துவங்கும். எழுத்தாளர், பதிப்பாளர், விற்பனையாளர் என பலரின் முன் ஏற்பாடுகள் தொடர்ந்தாலும், இந்த விழாவிற்கு முக்கியமானவர்கள் என்னவோ வாசகர்கள் தான். ஆகவே, அவர்களின் பதுகாப்பு மிக முக்கியம் அல்லவா? அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது, சென்னை புத்தக காட்சி விழா ஏற்பாட்டளர்களின் முக்கிய கடமைதானே!
45-ஆவது புத்தக காட்சி, வருகின்ற பிப்ரவரி 16-ஆம் தேதி துவங்கி, மார்ச் 02-ஆம் தேதி நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்த காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை இப் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரித்ததால், இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, மக்கள் கூட்டமாக ஒன்று கூடக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்தது தமிழ்நாடு அரசு, அத்தோடு கண்காட்சி போன்ற எந்த நிகழ்வுகளையும் மேற்கொள்ள கூடாது எனவும் அறிவித்திருந்ததால், திட்டமிட்ட தேதியில், 45-ஆவது புத்தக காட்சியை பபாசியால் நடத்த முடியாமல் போனது. தொடர்ந்து, தற்போது கொரோனா தொற்று பரவல் விகிதம் குறைந்து வருவதால் அந்த புத்தகக் காட்சியை தொடர அரசு அனுமதி வழங்கியுள்ளது. அப்படி வழங்கியுள்ள அனுமதியை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டியது எழுத்தாளர், பதிப்பாளர், விற்பனையாளர், வாசகர் என அனைவரின் கடமையாக உள்ளது.
என்னென்ன பாதுகாப்பை மேற்கொள்ளலாம்?
1. வீட்டில் இருந்து, செல்லும் போதே முறையாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
2. அவசியம், கையுறை அணிந்து இருக்க வேண்டும். கையுறை இல்லாமல், எந்த புத்தகத்தையும் தொடக்கூடாது.
3. குறிப்பிட்ட நேர இடைவெளியில், அரங்கத்தில் இருக்கும் வாசகர்களின் எண்ணிக்கையை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பபாசி செய்து இருந்தாலும், நாமும் நம்மை பாதுகாத்து; நாட்டை பாதுகாக்க வேண்டிய தேவையும், கடமையும் நமக்கு இருக்கிறது அல்லவா? அதனை நாம் செய்ய வேண்டாமா?
முகக்கவசத்தோடு கையுறையை அணிந்து, ஆயிரகணக்கான புத்தகங்களை தேடுங்கள், அரங்கம் முழுக்க ஓடுங்கள், உங்களை கவர்ந்த புத்தகங்களை வாங்குங்கள். இதனை உறுதி செய்யும் வகையில், பபாசி டிக்கெட் வழங்கும் இடத்தில் தற்காலிக கையுறையை டிக்கெட் உடன் இலவசமாகவே வழங்க வேண்டும் என்பதே கடைக்கோடி வாசகனின் எதிர்பார்ப்பு. இதனை செய்யுமா தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி)? காத்திருந்து பார்க்கலாம்.
- மு.சி. அறிவழகன்








