டெல்லியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
டெல்லியின் அலிபூர் பகுதியில் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஒரு குடோன் கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து விழுந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்து 4 தீ அணைப்பு வாகனங்களில் வந்த தீ அணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
அலிபூரில் நிகழ்ந்த விபத்து மிகவும் சோகமானது என்றும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது என்றும் இப்பணிகளை தாம் மேற்பார்வையிட்டு வருவதாகவும் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நினைத்து தாம் வேதனை கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளை வேண்டிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.









