50 பேர் கொண்ட அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் அமமுகவின், 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன், துணை பொதுச் செயலாளர்கள் பழனியப்பன், செந்தமிழன், ரங்கசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
அமமுகவின் கூட்டணி கட்சியில் எஸ்டிபிஐக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களரசு கட்சிக்கு திருத்துறைப்பூண்டி தொகுதியும், விடுதலை தமிழ் புலிகள் கட்சிக்கு திருவிடைமருதூர் தொகுதியும், கோகுலம் மக்கள் கட்சிக்கு தளி சட்டமன்றத் தொகுதியும், மருது சேனை கட்சிக்கு திருமங்கலம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓவைசியின் கட்சிக்கு வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனிடையே அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிகவுடனும் அமமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் தினகரன் போட்டியிடுகிறார்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது கோயில்பட்டி ஒன்றியக் குழு தலைவர் பதவியை அமமுக கைப்பற்றியது. அமமுக மண்டலச் செயலாளராக இருக்கும் மாணிக்கராஜா ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்றினார். ஆகவே, அமமுகவுக்கு செல்வாக்கு இருக்கும் என்பதால் கோவில்பட்டி தொகுதியை தினகரன் தெர்ந்தெடுத்திருக்கலாம்.







