கும்பகோணத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலக கட்டிடம் திட்டமிட்டபடி, எதிர்வரும் கருணாநிதி பிறந்த நாள் அன்று திறக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து 320 மகளிர்களுக்குத் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டப்பட்ட அதே நிலையிலேயே எவ்வித முன்னேற்றமும் இன்றி உள்ளது. இன்று தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் கருணாநிதி பிறந்த நாள் அன்று, தமிழ்நாடு முதலமைச்சரால் திறக்கப்படும். திமுக சொன்னதைச் செய்துகாட்டும் எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘சுற்றுலாத்துறை தனியார் மயமாகிறதா? – அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்’
தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற மேலவைக்கு செல்லும் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், மோடியிடம் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாகக் கூறுகிறார்களே அது என்ன ஆயிற்று எனக் கேட்க வேண்டும் என்று கூறிய அவர், தனக்கு அடிக்கல் நாட்டும் சம்பிரதாய பூஜை நிகழ்வுகளில் உடன்பாடு இல்லை எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.








