ஆசிய விளையாட்டு போட்டிகள்: 85 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் இந்தியா நிறைவு செய்தது.

20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 21 தங்கம் உட்பட 85 பதக்கங்களுடன் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜப்பானின் ஆய்ச்சி-நகோயா ஆசிய விளையாட்டு போட்டிகள் 2026 இன்று நிறைவடைந்தன. இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்ற விறுவிறுப்பான விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவுடன் முடித்து வைக்கப்பட்டது.

இறுதி பதக்கப் பட்டியலில் 341 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தைப் பிடித்தது.269 பதக்கங்களுடன் ஜப்பான் 2-வது இடத்திலும், 150 பதக்கங்களுடன் தென் கொரியா 3-வது இடத்திலும் உள்ளன. இந்தியா 85 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

20-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி மற்றும் 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்றுள்ளது.

36 விளையாட்டுப் பிரிவுகளில் 495 வீரர், வீராங்கனைகளை இந்தியா களமிறக்கியது. ஆசிய விளையாட்டு போட்டிகளின் வரலாற்றில் இந்தியாவின் 2-வது அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இது அமைந்தது.வில்வித்தை இந்தியாவின் வலுவான விளையாட்டுகளில் ஒன்றாக இருந்தது. இதில் இந்தியா 9 பதக்கங்களை வென்றது. கும்கும் மோகத் சிறப்பாக செயல்பட்டு 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

குத்துச்சண்டையில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்றது. மல்யுத்தத்தில் அமன் செஹ்ராவத் மற்றும் சுஜீத் கல்கல் ஆகியோர் மூலம் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட், ஆடவர் மற்றும் மகளிர் கபடி, ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி ஆகியவற்றிலும் இந்தியா தங்கப் பதக்கங்களை வென்றது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் தனிநபர் கோல்ஃப் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை பிரணவி உர்ஸ் வென்றார். தடகளத்தில் இந்தியா 24 பதக்கங்களை வென்றது. இதில் ஒரு தங்கப் பதக்கமும் அடங்கும். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா 15 பதக்கங்களை வென்றது. மேலும், சாப்ட் டென்னிஸ், MMA மற்றும் படகோட்டுதல் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக பதக்கங்களை வென்றது.

ஜப்பானின் நகோயாவில் உள்ள பாலோமா மிசுஹோ மைதானத்தில் நிறைவு விழா நடைபெற்றது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு விழா தொடங்கியது.

டிராப் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை நீரு தந்தா படைத்தார். நிறைவு விழாவில் இந்தியாவின் சார்பில் கொடி ஏந்துபவராக நீரு தந்தா தேர்வு செய்யப்பட்டார். நகோயாவில் அவர் இந்திய தேசியக் கொடியை பெருமையுடன் ஏந்திச் சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.