சென்னையில் தொடங்கியுள்ள ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை இந்திய அணி வீழ்த்தியது.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா,ஜப்பான், சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும், லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நேற்று இரவு தொடங்கியது. போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 6 கோல்களை பதிவு செய்தது. சீனா இரு கோல்கள் அடித்தது. இரண்டாவது பாதியில் மேலும் ஒரு கோல் அடித்த இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.





