ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் தென் கொரியாவை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர் சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், மலேசியா, கொரியா, சீனா மற்றும் பாகிஸ்தான் என 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை இந்தியா எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் இந்திய வீரர் நீலகண்டா ஷர்மா முதல் கோல் அடித்தார். 12-வது நிமிடத்தில் தென்கொரியா வீர்ர் கிம் சங்யுன் கோல் அடித்து சமன் செய்தார். இதனைத்தொடர்ந்து 23-வது நிமிடத்தில்,கேப்டன் ஹர்மன்பிரீத் ஒரு கோலும், 33-வது நிமிடத்தில் மன்தீப்சிங் ஒரு கோலும் அடித்து அசத்தினர்.
தென்கொரியா வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக போராடினார். 58வது நிமிடத்தில் ஜிஹன் யாங் ஒரு கோல் அடித்தார். தென்கொரியாவுக்கு 11 பெனால்டி கார்னர் கிடைத்தது. ஆனால் அவர்களால் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. முடிவில் இந்திய அணி 3க்கு2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதேபோல் ஜப்பானை 3க்கு1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மலேசியா அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.இதனிடையே இந்தியா- தென்கொரியா ஆட்டம் நடந்து கொண்டிருந்த போது கேலரியின் அருகே பின்பகுதியில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குளிர்பான கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் உள்ள கம்ப்ரசர் வெடித்தது தெரியவந்தது.






