ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரை சதம் அடித்து அசத்தினார். தனது 101 வது டி20 போட்டியில் 31வது அரைசதம் அடித்தார் விராட் கோலி.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய வெற்றித் தொடக்கத்தை தந்தது இந்தியா. இந்நிலையில், இன்று குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மற்றொரு அணியான ஹாங்காங்கை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஹாங்காங் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.தொடக்க ஆட்டக்காரராக ராகுலும், கேப்டன் ரோஹித் சர்மாவும் களம் கண்டனர்.
ரோகித் 21 ரன்களிலும், ராகுல் 36 ரன்களும் எடுத்திருந்தபோது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களம் புகுந்த விராட் கோலியும், சூர்ய குமார் யாதவும் நின்று விளையாடினர்.
கத்துக்குட்டி அணியான ஹாங்காங் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தனர்.
முதலில் கோலியும், அவரை தொடர்ந்து சூர்ய குமார் யாதவும் அரை சதம் பதிவு செய்தனர்.
சூர்ய குமார் யாதவ், 22 பந்துகளில் அரை சதம் பதிவு செய்து அசத்தினார்.
இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது இந்தியா.
கோலி 59 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.








