திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் காணொலி மூலம் நலம் வி்சாரித்து ஆறுதல் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு போதிய ஆலோசனைகளை வழங்கவும், இதேபோன்ற சம்பவங்களை அரசு கையாள்வதற்கும் முன்னாள் நீதியரசர் சந்ரு தலைமையில் ஒருநபர் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து உத்த்ரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் மேற்படிப்பிற்கான செலவை தானே ஏற்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் காணொளி வாயிலாக அறிவித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தொடர்பாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் மற்றும் அவரது சகோதரி
ஆகியோரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்தார் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாணவனோடு இருந்த அவரது தாயார் அம்பிகா ஆகியோரிடமும் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்.
” தைரியமாக இருக்க வேண்டும் . மன உறுதியுடன் இருந்து நல்ல நிலைக்கு வர வேண்டும். நன்றாக படிக்க வேண்டும் என ஆறுதல் கூறினார். டெல்லியில் இருந்து நேற்று தான் வந்ததால் என்னால் நேரில் வர முடியவில்லை எனவும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறும் போது தெரிவித்தார்.







