அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2ஆவது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தமானிற்குச் செல்லும் விமானங்களும் காலதாமதமாக புறப்படவுள்ளன.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான அசானி புயல் தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நேற்று 11.30 மணியளவில் ஆந்திரப்பிரதேசத்தின் மசூலிப்பட்டினத்தில் இருந்து 90 கிலோமீட்டர் தெற்கு, தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது. இது வடமேற்கில் நகர்ந்து ஆந்திரப்பிரதேச கடலோரப் பகுதிக்கு இன்று வந்துசேரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. பின்னர், இது திசைமாறி வடக்கு, வடகிழக்கு திசையில் நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று காலை புயலாகவும், நாளை தீவிர காற்றழுத்தமாகவும் வலுகுறையும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அசானி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அசானி புயல் காரணமாக நேற்று சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 2-வது நாளாக இன்றும் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல வேண்டிய 3 விமானங்களும், விஜயவாடா செல்ல வேண்டிய 2 விமானங்களும், ராஜமுந்திரி செல்ல வேண்டிய ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல, விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களில் இருந்து வர வேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
பெங்களூா், ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும், சென்னையில் இருந்து அந்தமானிற்கு காலை 8.15 மணிக்குச் செல்ல வேண்டிய விமானம் காலை 11.30 மணிக்கும், காலை 8.30 மணிக்குச் செல்ல வேண்டிய விமானம் பகல் 1 மணிக்கும் காலதாமதமாக புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.