அரசியலில் விஜயகாந்த் தற்போது பேச முடியாத நிலையில் இருப்பதால், சுற்றி இருப்பவர்கள் பேசிக் கொண்டிருப்பதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பண்ணப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தேமுதிகவின் நிர்வாகியின் இல்ல காதணி விழாவில் விஜயகாந்தின் மகனும், நடிகருமான விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். மேலும் சுற்றுவட்டார பகுதிகளான பாலவிடுதி பஸ் நிறுத்தம், ரெட்டியபட்டி பஸ் நிறுத்தம் மற்றும் வெள்ளாளப்பட்டி பகுதிகளில் தேமுதிக கொடியேற்று விழா நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய விஜய பிரபாகரன், பாஜக தலைவர் அண்ணாமலை சொந்த பணத்தை போட்டு பாஜக கட்சியை வளர்க்கவில்லை. தலைமையில் இருந்து வரும் பணம் மூலமாகவே கட்சியை வளர்க்கிறார் என்றார். உதயநிதி ஸ்டாலினும் சொத்து சேர்த்து வைத்து கட்சியை வளர்ப்பவர்கள். ஆனால் விஜயகாந்த் சொத்தை விற்று கட்சி நடத்தி வருகிறார் என்றார்.
2005-இல் இருந்த சொத்து கணக்கும், இன்று உள்ள எங்களது சொத்து கணக்கையும் நிரூபிக்க தயாராக உள்ளோம். எங்கள் மீது யாரேனும் குற்றம் சாட்ட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். கடந்த தேர்தலில் அமைச்சர் செந்தில் பாலாஜியும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் தேர்தலை மிகவும் செழிப்பாக நடத்தினார்கள். 2005-க்கு முன்பு எவ்வளவு சொத்து இருக்கு என்றும் தற்போது எவ்வளவு சொத்து இருக்கிறது என்று தன்னால் நிரூபிக்க முடியும் என்றார்.
தேமுதிகவை வழிநடத்த யாரிடமாவது ஆயிரம் கோடி வாங்கி இருக்கிறேன் என்று நிரூபித்து விட்டால், இந்த கட்சியை கலைத்து விடுகிறேன் என கூறினார். ஏதே கூட்டத்தில் கலந்து கொண்டதால் தான் இவ்வாறு பேசவில்லை என்ற அவர், விஜயகாந்த் தற்போது பேசாத நிலையில் இருப்பதால், சுற்றி இருப்பவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








