“தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் பயணிக்க முடியாது” – காதர் மொய்தீன்

தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் பயணிக்க முடியாது என்று ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று, போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது. இதனையடுத்து தேர்தலுக்கு பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்தது. மேலும் தவெக அமைச்சரவையிலும் இடம் பெற்றது. அதன்படி பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதிவியேற்றார்.

இந்நிலையில் இன்று சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற ஐயூஎம்எல் பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் திமுக கூட்டணியில் இருந்து ஐயூஎம்எல் விலகுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து காதர் மொய்தீன் செய்தியாளட்களிடம் பேசியதாவது, “தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக ஆதரவோடு, இரண்டு தொகுதிகளில் ஐயூஎம்எல் வெற்றி பெற்றது. நீண்ட காலத்திற்கு பிறகு தமிழக சட்டமன்றத்தில் இரண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு மேல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையோடு தான் இந்த தேர்தலில் உழைத்தோம், ஆனால் கடவுள் நாட்டம் வேறாக இருந்தது.

அனைத்து இடங்களில் விசில் ஊதப்பட்டு ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதியில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக நிபந்தனையின்றி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு வந்ததையடுத்து ஷாஜகான் அவர்களை அமைச்சரவையில் இடம்பெற செய்தோம்.

தவெக நல்லாட்சி தொடர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற வைத்ததற்கு முதலமைச்சர் விஜய்க்கு நன்றி. தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் பயணிக்க முடியாது.

இஸ்லாமிய மார்க்கத்தில் 5 கடமை உள்ளது 6-வது கடமை ஜனநாயகத்தில் வாக்களிப்பதாக கருத வேண்டும், திமுகவுக்கு வாக்களிப்பது 6-வது கடமை என்று நான் சொல்லவில்லை” என்று அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.