மனதையும் உடலையும் அமைதியாக்கும் என்று கூறி மருத்துவர் ஒருவர் பசுஞ்சாணத்தை உண்ணும் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா வேகமாக பரவிய காலத்தில், வட இந்தியாவில் சில மாநிலங்களில் மாட்டு சாணத்தை உடலில் பூசினால் தொற்றுப் பரவாது என்று கூறி அதைப் பூசிக் கொண்ட சம்பவம் நடந்தது. தடுப்பூசியும் மருந்தும் கண்டுபிடிக்காத காலகட்டத்திலேயே, பா.ஜ.க பிரமுகர்கள் பசுஞ்சாணத்தையும் கோமியத்தையும் கொரோனா தொற்றுக்கு மருந்தாகப் பரிந்துரைத்திருந்தனர். ஆனால், மருத்துவர்கள் அதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் மிட்டல். மருத்துவரான இவர், சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அதில், அவர் பசுமாடுகளின் காப்பகத்தில் நின்றபடி, பசுஞ்சாணியை எடுக்கிறார். அதில் ஓர் உருண்டையை எடுத்து வாயில் போட்டு உண்கிறார். பிறகு பசுஞ்சாணத்தின் நன்மைகள் குறித்து அவர் அதில் பேசுகிறார்.
தனது தாயார் விரதத்தின் போது அதை சாப்பிடுவார் என்றும் பசுஞ்சாணம் மனதையும் ஆன்மாவையும் அமைதிப்படுத்தும் திறன் கொண்டது என்றும் உடலுக்குள் சென்றதும் சுத்தப்படுத்துகிறது என்றும் கூறுகிறார்.
சமூக வலைதளத்தில் வைரலான இந்த வீடியோவுக்கு நெட்டிசன்ஸ் சரமாரி கமென்ட்களையும் தெரிவித்துள்ளனர்.









