போதை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. வெளிநாட்டை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார். கைதானவர்களிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிந்து ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை மும்பை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களது ஜாமீன் மனு 2 முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆர்யன் கான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நேற்று இந்த விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இருதரப்பினரிடம் விசாரணை நடத்திய நீதிமன்றம் அந்த வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில், ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரின் ஜாமீன் நிபந்தனைகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.







