ஆர்யன் கான் வழக்கு – சமீர் வான்கடேவுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள FIR-ன் முழு விவரம்…

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடேவுக்கு எதிராக நேற்று சிபிஐ சம்மன் அனுப்பி இருந்ததோடு, வருகிற மே 18ஆம் தேதி இது தொடர்பான அறிக்கையை பதிவு செய்யவும் உத்தரவிட்டிருந்தது. கடந்த…

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடேவுக்கு எதிராக நேற்று சிபிஐ சம்மன் அனுப்பி இருந்ததோடு, வருகிற மே 18ஆம் தேதி இது தொடர்பான அறிக்கையை பதிவு செய்யவும் உத்தரவிட்டிருந்தது. கடந்த மே 11 ஆம் தேதியே இந்த வழக்கில் சிபிஐ FIR பதிவு செய்திருந்த நிலையில், அதன் முழு விவரத்தை தற்போது காண்போம்.

கடந்த 2021ல் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் அப்போது கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சில வாரங்கள் சிறையில் இருந்த பின்னரே ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கிலிருந்த அவரை விடுவித்தனர். இருப்பினும், விசாரணை சமயத்திலேயே இந்த வழக்கில் ஆர்யன் கானை மட்டும் விடுவிக்க ஷாருக் கானிடம் NCB அதிகாரிகள் ரூபாய் 25 கோடி பேரம் பேசியதாகத் தகவல் வெளியானதை தொடர்ந்து, மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட சமீர் வான்கடே பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்துக்கு மாற்றப்பட்டார்.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு சமீர் வான்கடேவுக்கு எதிராக சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்ததோடு, சமீர் வான்கடே உட்பட 4 அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் ரெய்டும் நடத்தினர். பின்னர் சி.பி.ஐ அதிகாரிகள் பதிவுசெய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையின் (FIR) படி, ஆர்யன் கான் வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்த கே.பி.கோசாவி என்பவர் சமீர் வான்கடே சார்பாக ஷாருக்கானை மிரட்டி ரூ.25 கோடி வாங்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதன் முழு விவரமாக, ஆர்யன் கானையும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு செல்லும்போது , அவர்களைக் கவனித்துக்கொள்ளும் முழு பொறுப்பையும் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கே.பி.கோசாவிடமே போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் வி.வி சிங் கொடுத்துவிட்டதாகவும், சமீர் வான்கடேவின் வழிகாட்டுதல் படிதான் இத்தகைய செயல் செய்யப்பட்டதாகவும் FIR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்யன் கான் உட்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் கே.பி.கோசாவி தனது சொந்த வாகனத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து சென்றதோடு, குற்றவாளிகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கி, அவரைப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி போன்று காட்ட அங்கு இருந்தவர்கள் முயன்றிருக்கிறார்கள் என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலையில் தான், கே.பி.கோசாவி ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட போது அவருடன் சேர்ந்தார் போல் ஒரு செல்ஃபீ புகைப்படத்தை எடுத்து அதை வைரலாகியதாகவும், இந்த விவகாரத்தில் சமீர் வான்கடே மட்டுமல்லாது, NCBயின் கண்காணிப்பாளர் வி.வி சிங் மற்றும் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் அப்போதைய புலனாய்வு அதிகாரியாக இருந்த ஆஷிஷ் ரஞ்சன் மற்றும் கே.பி.கோசாவியின் கூட்டாளி டிசோசா ஆகியோரும் இணைந்துதான் மேற்கூறப்பட்ட அத்தணை செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து வழி நடத்தியதாக FIR -ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின் இவர்கள் கே.பி.கோசாவியை முன்னிறுத்தி ஆர்யன் கான் குடும்பத்திடம் ரூ.25 கோடியை மிரட்டிப் பறிக்க திட்டமிட்டு, பின்னர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 25 கோடி ரூபாயை, 18 கோடி ரூபாயாக குறைத்துள்ளனர். இதன் முன்பணமாக ரூ.50 லட்சத்தை கே.பி.கோசாவியும், டிசோசாவும் வாங்கியிருந்தாலும், அந்தப் பணத்தில் குறிப்பிட்ட அளவைத் திரும்பக் கொடுத்துவிட்டதாக FIR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, சமீர் வான்கடே தனது வெளிநாட்டு பயணங்களை சரியாக விளக்கவில்லை என்றும், அவரது வெளிநாட்டு பயணங்களுக்கான செலவை தவறாக அறிவித்ததாகவும் NCBயின் விஜிலென்ஸ் கிளை குறிப்பிட்டுள்ள தகவலை FIR-ல் அடிகோடிட்டு காட்டிய சிபிஐ, அவர் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை விற்பதிலும், வாங்குவதிலும் ஈடுபட்டிருப்பதும் தற்போது தெரியவந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இது தவிர, சமீர் வான்கடே ஊழல் மூலம் அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்தே ரெய்டு நடத்தப்பட்டதாகவும், அதனடிப்படையிலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.