விமானப் பணிப்பெண் ஒருவர் விமானத்தில் செய்த செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்னையர் தினமான மே 14 ஆம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில், அன்னையர் தினத்தை முன்னிட்டு விமானத்தில் பணிப்பெண்ணாக இருக்கும் தனது தாய் குறித்த சிறப்பு அறிவிப்பை, அதே விமானத்தில் பணிப்பெண்ணாக இருக்கும் மகள் அறிவிக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நபீரா இராம் ஷம்சி என்ற அந்த விமான பணிப்பெண், பயணிகள் அனைவரையும் வரவேற்ற பின், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தொடர்ந்து அதே விமானத்தில் பணிப்பெண்ணாக இருக்கும் தனது தாய் இராம் ஷம்சியையும் பயணிகளிடம் அறிமுகப்படுத்துகிறார்.
தொடர்ந்து பேசிய நபீரா, “என்னுடைய அம்மாவை சீருடையில் பார்ப்பது இதுவே முதல் முறை. என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை” என்று தெரிவித்தார். மேலும் ஆறு வருடங்கள் தனது தாய் விமானப் பணிபெண்ணாக அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருவது குறித்து எடுத்துரைத்தார். இதைக் கேட்ட அவரது தாயின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. மகள் நபீராவின் கன்னங்களில் அவர் அன்பு முத்தம் பொழிந்தார்.
இந்த அழகான தருணத்தை கண்டு நெகிழ்ந்த பயணிகள், இருவரையும் ஆரவாரம் செய்து கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். இண்டிகோ நிறுவனம் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 75 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. வீடியோவைக் காணும் இணையவாசிகள் கமெண்ட்களில் நேர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.