அரசியல் காரணங்களுக்காக சசிகலாவிற்கு இடையூறு ஏற்படுத்தவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து மண்டல பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்ததார்.
அப்போது மேகதாது விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதில் சொன்ன டிடிவி தினகரன், மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசை கண்டித்து அமமுக சார்பில் வரும் 14-ம் தேதி திருச்சியில் ஆர்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்தார்.
மேலும், உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்பதில் மத்திய அரசு சரியான முறையில் செயல்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். அப்போது ஜெயலலிதா மறைவு தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்ட போது, கட்சியினருக்கும், மக்களுக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி தெரியும் என்றும், அவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசியல் காரணங்களுக்காக சசிகலாவிற்கு இடையூறு ஏற்படுத்தவே ஆறுமுக சாமி ஆணையம் அமைக்கப்பட்டதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.








