திருவாரூரில் திறக்கப்பட்ட கலைஞர் கோட்டத்தை குழந்தைகள் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்து வருகின்றனர்.
திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் 7 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டது. இதனை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த கலைஞர் கோட்டத்தில் வெள்ளை பளிங்கு கற்களால் ஆன கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், கருணாநிதியின் நினைவுகளை போற்றக்கூடிய பழமையான புகைப்படங்கள், அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், கருணாநிதி அடைக்கப்பட்டிருந்த சிறை போன்ற கட்டமைப்புகள், அவரின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பும் வகையில் இரண்டு சிறிய திரையரங்குகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
மேலும் வளாகத்தில் இரண்டு திருமண மண்டபங்களும் உள்ளன. இந்த கலைஞர் கோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக இன்று முதல் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதலே ஆர்வத்துடன் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இதே போல் கருணாநிதியின் அருகே அமர்ந்து புகைப்படம் எடுப்பது போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அரங்கில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த கலைஞர் கோட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், சாதாரண குடும்பத்தில் இருந்து பிறந்து தமிழ்நாட்டின் அரசியலின் உச்சத்திற்கு சென்ற கருணாநிதியின் நினைவு அருங்காட்சியகத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்துள்ளதாகவும், இதனை அமைக்க ஏற்பாடு செய்த முதலமைச்சருக்கும், இதனை வடிவமைத்தவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.







