உலக யோக தினத்தை முன்னிட்டு சூரத்தில் 1.53 லட்சம் பேர் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சியானது உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் உலக யோகா தினத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் 1.53 லட்சம் மக்கள் கலந்து கொண்டதாக நிகழ்ச்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை உலக கின்னஸ் சாதனை அமைப்பும் உறுதி செய்துள்ளது. இதற்கு முன்னதாக பதிவு செய்யப்பட்ட உலக சாதனையானது 2018 ல் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் 1,00,984 பேர் கலந்து கொண்டதாகும். தற்போது இந்த உலக சாதனையானது முறியடிக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், சூரத்தின் டுமாஸ் பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான ‘சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். சூரத்தில் யோகாசனம் செய்ய 1.25 லட்சம் பேர் கலந்து கொள்ள வேண்டும் என மாநில அரசு இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த இடத்தில் திரண்டதை கின்னஸ் சாதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என்று சூரத் மாநகராட்சி ஆணையர் ஷாலினி அகர்வால் தெரிவித்தார்.
சூரத்தில் நடந்த யோகாசனத்தில் 1.53 லட்சம் பேர் பங்கேற்றதை கின்னஸ் உலக சாதனைப் பிரதிநிதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“சூரத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்வு, ஒரே இடத்தில் அதிக மக்கள் கூடி யோகாசனம் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர்” என்று குஜராத் மாநில அமைச்சர் கூறினார்.
குஜராத் முழுவதும், 72,000 இடங்களில் யோகா தின கொண்டாட்டத்தில் 1.25 கோடி பேர் பங்கேற்றதாக முதல்வர் சூரத்தில் தனது உரையில் தெரிவித்தார்.







